டில்லி
மருத்துவர்களுக்கும் மருந்து உற்பத்தியாளர்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக மோடி பேசியதை எதிர்த்து மோடிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் எதிர்ப்புக் கடிதம் எழுதி உள்ளனர்.
சென்ற வாரம் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களிடம், “மருத்துவர்களுக்கும் மருந்து உற்பத்தியாளர்களுக்கும் இடையே தனி உறவு உள்ளது. பல மருத்துவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் மருந்து உற்பத்தியாளர்களின் செலவில் நடைபெறுகிறது” எனக் கூறினார். அது இந்திய மருத்துவர்களுக்கு மனக் கசப்பை உண்டாக்கி உள்ளது.
இது குறித்து டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் சங்கம் ஒரு கண்டனக் கடிதத்தை மோடிக்கு எழுதி உள்ளது. அந்தக் கடிதத்தில், “மருத்துவர்கள் அனைவரும் மருந்து உற்பத்தியாளர்களின் செலவில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறியது கண்டனத்துக்குரியது. மருத்துவ சுற்றுலாவாக மருத்துவர்கள் வெளிநாடு செல்வதை கொச்சைப்படுத்துவது போல பிரதமர் பேசி உள்ளார். இதனால் மருந்துக் கம்பெனிகளுக்கும் மருத்துவர்களுக்கும் பெரும் மனச்சங்கடம் உண்டாகி இருக்கிறது.
ஏதோ ஒரு சில மருத்துவர்கள் இது போல இருப்பதால் ஒரு வெளிநாட்டு நிகழ்வில் இது போல மருத்துவர்களின் சேவையை கிண்டலுக்குள்ளாக்கி இருக்க வேண்டாம். வெளிநாட்டுக்கு சென்று ஒரு பிரதமர் மருத்துவர்களை கேவலம் செய்வது உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக நிகழ்ந்துள்ளது. மருத்துவர்களின் சேவையை பற்றி அறிந்த ஒரு பிரதமர் இவ்வாறு கூறுவது மிகவும் தவறானது
பிரதமர் மோடியை வெள்ளைக் கோட்டு அணிந்து ஒரு நாள் முழுவதும் மருத்துவர் பணி புரியச் சொல்லி வேண்டுகோள் விடுக்கிறோம். அதன் பிறகாவது மருத்துவர்கள் பற்றி இவ்வாறு கூறுவது தவறு என்பதை புரிந்துக் கொள்வார் என நம்புகிறோம்,” என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.