கர்நாடக மாநிலத்தில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேரும், அக்கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் – மதச்சாற்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்வதாக கோரி கடிதம் கொடுத்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. வாக்கெடுப்பின் போது, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவைக்கு வராத காரணத்தால், எச்.டி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கடந்த 22ம் தேதி கவிழ்ந்தது. இதை தொடர்ந்து ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் மற்றும் மதச்சாற்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கடிதம் வழங்கப்பட்டது. அக்கடிதத்தினை ஏற்று, முதலில் மூவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மேலும் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இத்தகைய சூழலில், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.