சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் சபாநாயகருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

திமுக   மற்றும் ஆதரவு கட்சிகள் மெஜாரிட்டியாக இருப்பதால், சபாநாயகர் மீதான அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் மறைந்த தலைவர்கள், உறுப்பினர் களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதையடுத்து, கேள்வி நேரம்  நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளக்கு துரைசார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினர். இது முடிந்ததும், சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு அவையில் இருந்து வெளியேறினார். துணை சபாநாயகரான பிச்சாண்டி அவையை நடத்தினார். இதையடுத்து தீர்மானத்தின்மீது விவாதங்கள் நடைபெற்றது.

இந்த தீர்மானத்தின்மீது பேசிய முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் அப்பாவுமீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு நேர்மையாகவே செயல்படுகிறார் என பாராட்டுரை வழங்கினார்.

இந்த தீர்மானத்தின்மீது அனைத்து கட்சி தலைவர்களும்  பேசிய நிலையில், டிவிஷன்  வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிமுக கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவை. இந்த நிலையில்,   அதிமுக உறுப்பினர் களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தீர்மானம் தோல்வி அடைவது உறுதியானது.

அதன்படி,  நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 154 பேரும் ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர். இதனார் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.