கேரள மாநிலம் பீர்மேடு ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக்கான போட்டியில், அதிமுகவை சேர்ந்ந பிரவீணா என்கிற பெண், காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றிருப்பது, அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் காங்கிரஸ் உடனான கூட்டணியில் இடதுசாரிகளின் இரு பிரிவுகளும் அங்கம் வகித்து வருகின்றன. ஆனால் கேரளாவில் மட்டும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இடதுசாரிகள் கூட்டணி அமைத்து, ஆட்சி நடத்தி வருகின்றன.பீர்மேடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜாணி வினோத் மீது, சமீபத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். இதில் ராஜானி வினோத் தோற்றதால், அவர் பதவியை இழந்தார்.
தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்த பெண் மட்டுமே அந்த பதவிக்கு போட்டியிட முடியும் என்கிற நிலையில், தேர்தல் ஆணைய கணக்கீடுகளின் படி மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி 7 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும், அதிமுக 1 உறுப்பினரையும் கொண்டிருந்தன. சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தாவியதால், அவர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் மீண்டும் ராஜாணி வினோத் போட்டியிட, அதிமுகவை சேர்ந்த பிரவீணா என்கிற ஒற்றை கவுன்சிலர், பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார். வாக்கெடுப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 1 வாக்குகள் கூடுதலாக பெற்றதால், காங்கிரஸ் ஆதரவுடன் பிரவீணா, பீர்மேடு ஊராட்சிமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கேரளாவில் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பை அதிமுக வென்றிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.