சென்னை: ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் ஏன் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியின் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது குறித்து இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பிற்பகல் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அதிகரித்திருந்தோம், ஆனால், தற்போது அவைகளை காணவில்லை. தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. நீட் தேவையில்லை என்பது அதிமுகவின் கொள்கை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து என உறுதியளித்து வாக்குகளை பெற்றவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அவர் அதை ஏன் செய்யவில்லை?
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் சொன்னார். இதுவரை ஏன் கையெழுத்து போடவில்லை? அவர்களுக்கு ஓட்டு வாங்கினால் போதும்… நீட் விவகாரத்தில், திமுக மாணவ, மாணவிகளை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளது என்று குற்றம் சாட்டியதுடன், திமுக. நீட் விலக்கு மசோதா தீர்மானத்துக்கு சட்டமன்றத்தில் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்கும் அதிமுக குழுவை அனுப்பி வைத்தோம் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது திமுக எடுத்துள்ள முடிவைத்தான் அதிமுக ஆட்சியிலும் செய்யப்பட்டது. எங்களை பொறுத்தளவில் நீட் தேவையில்லை என்பதுதான் நிலைபாடு என்று கூறியதுடன், தற்போது திமுக அரசு, அதிமுகவின் நலத்திட்டங்களை தனது திட்டங்களாக கூறி வருகிறது என விமர்சித்ததுடன், சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுக போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.