சென்னை: ‘பொய் வழக்கு போடாதே’ என்ற கோஷமுடன், அந்த வாசகம் அடங்கிய பதாகைகளுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில்  இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், ராஜ்யசபா தேர்தல் காரணமாக, செப்டம்பர் 13ல் கூட்டத்தை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக  சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இன்றைய பட்ஜெட் விவாதத்தின்போது, பாமக, பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்கள் பேசுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று சட்டமன்றம் கூட்டப்பட்டதும், கொடநாடு விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது,  அதிமுகவினர் மீது தமிழக அரசு பொய் வழக்கு போடுவதாகக் கூறினார், கொடநாடு விவகாரத்தில் வேண்டும் என்றே பெரிதாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அவை வாயில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டனர். அவைக்காவலர்கள் கூறியதையடுத்து அங்கிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் பொய் வழக்கு போடாரே என்ற பாதாதைகளுடன்  வெளியேறினர். தொடர்ந்து கூட்டணி கட்சியான பாஜகவினரும் பாமகவினரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது குறிக்கிட்டுப் பேசிய முதல்வர்  மு.க.ஸ்டாலின், “நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விசாரணை நடைபெற்று வருகிறது. அரசுக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை, விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், யாரும் அச்சப்பட வேண்டியதில்லை.” என்று பதில் கூறினார்.

முதல்வரின் பேச்சுக்கு எதிராக  அதிமுக உறுப்பினர்கள் ‘பொய் வழக்கு போடாதே, தமிழக மக்களை வஞ்சிக்காதே’ என்று கோஷமிட்டனர்.  தொடர்ந்து  ‘பொய் வழக்கு போடாதே’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.