சென்னை: அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் பாஜகவால் எந்த பயனும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
அதிமுக பாஜக இடையே முட்டல் மோதல் தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. மோதலின் உச்சக்கட்டமாக, பாஜகவின் தொழில்நுட்பபிரிவைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார் உள்பட தொடர்ந்து பலர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் கூண்டோடு இணைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி, பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக இதனை செய்திருக்க கூடாது என்று, பாஜவினர் இணைவது குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார். இதைத்தொடர்ந்தஇ, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை எரித்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பாஜகவை போல் அதிமுக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டால் பாஜகவால் ஈடுகட்ட முடியாது. பாஜகவினர் சிலர் விருப்பப்பட்டு மாற்றுக் கட்சியில் இணைகிறார்கள். அதனை ஏற்கும் பக்குவம் அண்ணா மலைக்கு தேவை. அதேபோல் பாஜக உடனான கூட்டணி தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அதிமுகவில் இல்லாமல் பாஜக தனியே போவதற்கு வாய்ப்பு கிடையாது. பாஜக தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. எனவே, அதிமுக முதுகில் ஏறி வசாரி செய்ய வேண்டும் என்பது கட்டாயம். எப்படி இருந்தாலும் அதிமுகவை தனித்து செயல்பட விட மாட்டார்கள் என காட்டமாக விமர்சித்தார்.
மேலும், அதிமுகவிற்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம். நீங்கள் தேர்தலை மட்டும் கவனத்தில் கொண்டோ, பாஜகவால் எந்த நெருக்கடியும் வரக் கூடாது என்ற தற்காப்பு உணர்வில் இருந்து மட்டுமே முடிவை எடுக்கக் கூடாது. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை. அது பாஜகவுக்கு தான் பயனளிக்கும். அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டிற்கே பாதிப்பு.
எனவே, அதிமுக சுதந்திரமாக முடிவு செய்ய வேண்டும். பாஜகவை கழற்றிவிட வேண்டும். பாஜக இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கும் நல்லது. தமிழ்நாட்டிற்கும் நல்லது என தெரிவித்தார்.