சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா அதிமுகவை கடுமையாக சாடினார்.

தேமுதிக கூட்டணி சேர்ந்ததால் தான் அதிமுக ஆட்சியில் அமர முடிந்தது என்று கூறியவர், தற்போது அதிமுக ஆட்சி தொடருவதற்கு தேமுதிக தான் காரணம் என்றும், அதிமுக எம்.பி.க் களால் எந்தவித பயனும் இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக, தேமுதிக ஒரே நேரத்தில், திமுகவிலும், அதிமுகவிலும் திரை மறைவு பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில், பிரேமலதாவின் நிபந்தனைகள் காரண மாக, திமுக தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்ட நிலையில், அதிமுக பாஜக கூட்டணிகளும் நிபந்தனைகளை ஏற்க மறுத்து வருவதால் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், திமுகவில் கூட்டணி மற்றும் தொகுதிகள் முடிந்து விட்ட நிலையில், மீண்டும் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச தேமுதிக முயற்சித்தது. இது குறித்து திமுக பொருளாளர், துரைமுருகன் கூட்டணிப்பேச்சுவார்த்தையை வெளிப்படையாக கூறியதால், தேமுதிக தரப்பு ஆத்திரம் அடைந்துள்ளது. இந்த விவகாரம் தேமுதிக மீதான மரியாதையை குழிதோண்டி புதைத்த நிலையில், தமிழகத்தில் கடுமையான அரசியல் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா திமுக, அதிமுக மீது கடுமை யாக சாடினார். செய்தியாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து பேசிய பிரேமலதா,  தேமுதிகவை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.

அதிமுக கூட்டணியில், பாமகவை முதலில் அழைத்து ஒப்பந்தம் போட்டதாலேயே கூட்டணி இறுதியாவதில் தாமதம் ஆகியவதாக கூறியவர், . ஜெயலலிதாவை சட்டப்பேரவையிலேயே எதிர்த்தவர் விஜயகாந்த். மற்றவர்களைப் போல சட்டையைக் கிழித்துவிட்டு வந்தவரல்ல என்றும்  கடுமையாக சாடினார்.

கடந்த முறை அதிமுக தனித்து நின்று 37 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த 37 எம்.பி.க்களால் தமிழகத்துக்கு கிடைத்தது என்ன? யார் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களின் கூட்டணியில் இருக்கும் போதுதான் தமிழகத்துக்கு தேவையான நல்ல திட்டங்களை கேட்டுப்பெற முடியும் என்றும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.

கட்சி மீது விமர்சனம் வைப்பதால், கூட்டணி வைக்க மாட்டோம் என அர்த்தமில்லை என்றவர்,
அதிமுக ஆட்சி தொடர தேமுதிக கூட்டணி வைத்தது தான் காரணம்  என்றும்,  தனித்து போட்டியிட தேமுதிகவுக்கு பயமில்லை என்றவர்,  கூட்டணி குறித்து விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

தேமுதிகவுடன் கூட்டணிக்காக அதிமுக காத்திருக்கையில், பிரேமலதாவின் இன்றை பேட்டி அதிமுக தலைவர்களிடையே கடுமையான வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அதிமுக பாஜக அணியில் தேமுதிக இணைவதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.