சென்னை: எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதனால், ஆட்சியை பறிகொடுத்த அதிமுக, எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது. இதையடுத்து எதிர்க்ககட்சி தலைவர் பதவிக்கு அக்கட்சியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒரு தரப்பினர் எதிர்க்கட்சித் தலைவராக பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிமுக நிர்வாகிகள் இடையே 4 மணி நேரம் விவாதம் நீடித்த நிலையில் முடிவும் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. முடிவு எட்டப்படாததால் நாளை  (திங்கட்கிழமை) காலை 09:30 மணிக்கு மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முடிவு செய்ய நாளை காலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதிக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.