மக்களவையில் அதிமுக எம்பிகள் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து அமளில் ஈடுபட்டதால் அவர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் வேணுகோபாலை தவிர்த்து பிற எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு தொடங்கிய நிலையில் இன்று மக்களை கூடியது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காரச்சாரமாக ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அடுக்கடுக்கான கேள்விகளையும் பிரதமர் மோடியை நோக்கி முன் வைத்தார். அவரின் ஒரு சில கேள்விகளுக்கு நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி பதிலளித்து பேசினார். இதனால் அவை நடவடிக்கைகள் சூடுப்பிடித்தன.
அவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல தைரியம் இல்லாத பிரதமர் மோடி, தனது அறைக்குள் பதுங்கி கொள்கிறார் என ராகுல்காந்தி குற்றாம்சாட்டினார். இந்த விவாதத்தில் இடையே காவிரி மற்றும் மேகத்தாது அணை பிரச்சனையை காரணம் காட்டி அவையில் இருந்த அதிமுக எம்பிக்கள் தொடர் அமளில் ஈடுபட்டனர். அவர்கள் அவை கூடியதில் இருந்தே கூச்சலிட்டனர். பலமுறை சபாநாயகர் அமைதியாக இருக்கும் படி எச்சரித்தும் அதிமுக எம்பிக்கள் கேட்கவில்லை. ராகுல்காந்தி பேசும்போது மேசையில் இருந்த அட்டைகளை கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர்.
இதனை தொடர்ந்து, மக்களவை சபாநாகர் சுமித்ரா மகாஜன் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்பிக்கள் 5 அமர்வுகளில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்களவையின் 374A நாடாளுமன்ற விதிமுறைப்படி சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அவை நடவடிக்கைகளை செயல்படுத்த விடாமல் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சுமித்ரா மகாஜன் விளக்கம் அளித்தார்.
மக்களவையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்வது என்பது அரிதானது ஒன்று. அதிமுக எம்பிக்களின் தொடர் அமளியால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டதே இதற்கு காரணம். இதனிடையே, ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை காப்பாற்றவே அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு இடையூறு செய்ததாக ராகுல்காந்தி குற்றசாட்டியுள்ளார்.