சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக அதிமுக எம்.பி., ரவிந்திரநாத், காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் ஆகியோர் தேர்வாகியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி, மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு இதுவரை ரூ.12 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சுற்றுச்சுவர் தவிர வேறு எந்தவொரு வேலையும் நடைபெறவில்லை.

ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் மற்றும் 17 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை எய்ம்சின்  தலைவராக புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமனம்  செய்யப்பட்டார். பின்னர் ஐ.ஐ.டி-மெட்ராஸ் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்பட   15 பேர் அறிவிக்கப்பட்டனர். 2 இடங்கள் காலியாக உள்ளது.

இந்த நிலையில், நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு, தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட  2 இடங்களுக்கு  3 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  ஆனால்,  மதுரை எம்பி சு.வெங்கடேசன் போட்டியில் இருந்து  விலகியதால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர்நாத் குமார் எம்பி மற்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.