அவதூறு செய்திகள் குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான சி.வி. சண்முகம், எம்.பி. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரான என்னுடைய லெட்டர்பேடை போலியாக தயாரித்து வெளியிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலின்போது எங்கள் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக நான் பேசியதாக என்னுடைய பெயரில் போலி லெட்டர்பேட் தயாரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன்.

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஆதரவாக நான் பேசியதாக கூறி போலியான செய்தியை வெளியிட்டார்கள். இது தொடர்பாக நேரில் புகார் அளித்தேன். ஒரு மாதம் ஆகியும் இது தொடர்பாக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை.

இதுவரை 20க்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளேன். ஆனால் எந்த புகார்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

புகார் அளித்தால் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டியது காவல்துறையின் முதல் கடமை. முதல்வர் ஸ்டாலினின் கீழ் உள்ள காவல்துறை வழக்குக்கூட பதிவு செய்யாமல் உள்ளது.

என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். இதன் பின்னணியில் உள்ளது யார்? இந்த குற்றங்களுக்கெல்லாம் அரசு துணை போகிறதா? என்று கேள்வி எழுப்பிய சி.வி. சண்முகம் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்ட சி.வி. சண்முகம் எம்.பி.யை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.