ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் செந்தில் முருகன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், உடனடியாக அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 5.ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஜனவரி 10 தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணி சார்பில், திமுக போட்டியிடுகிறது. அதுபோல நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. மற்ற எதிர்க்கட்சிகள், பாஜக போன்ற அனைத்து கட்சிகளையும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. அதனால், ஏராளமான சுயேச்சைகள் களமிறங்கி உள்ளனர்.
இதற்கிடையில், அதிமுக பிரமுகர் செந்தில் முருகன் என்பவர், அதிமுக போட்டியிடாத அதிருப்தியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவரை நீக்குவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், வேட்புமனு வாபஸ் வாங்கும் கடைசி நாளான நேற்று (ஜனவரி 20ந்தேதி) காலை 11 மணிக்கு முதல் நபராக அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார். அடுத்தடுத்து சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். மாலை 3 மணி வரை 8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், இடைத்தேர்தலில் இறுதியாக 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் உடனடியாக அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அப்போது திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன் என்று கூறினார்.