சென்னை: அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்,  அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது,  என்றும், அது அதிமுக தலையில்லாத முண்டம் என டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. மேலும், டிடிவி தினகரன், சசிகலா என ஆளுக்கு ஒரு பக்கம் தங்களது ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். ஆனால், 2024 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுகவை ஒன்றினைத்து, அதன் முதுகில் ஏறி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதை டிடிவி தினகரனும் வரவேற்று இருந்தார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், தினகரன் 1 சதவீதம் கூட இடம்பெற வாய்ப்பு இல்லை என காட்டமாக விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுகவை டிடிவி  தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை. அதிமுக தலையில்லாத முண்டம் போல உள்ளது. அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது. பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அதிமுக செயல்படாத நிலையில் உள்ளதால்தான் மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள். நாளையே தேர்தல் வந்தாலும் வேட்பாளர்களுக்கு படிவங்கள் கூட வழங்க முடியாத நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் சேர்த்து செயல்பட அரைக்கால் சதவீதம் கூட வாய்ப்பில்லை என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.