டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு  விசாரணையை மீண்டும்  ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

சென்னை கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற  விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். கட்சி செயல்பட முடியாத நிலை உள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார். இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 12ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய நாளில் அலுவல் நேரம் முடிவடைந்ததால்  டிசம்பர் 15ந்தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

அதனால், இன்று வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இன்றும் இந்த வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை அடுத்து, ஜனவரி 4ம் தேதி மதியம் 2 மணிக்கு விசாரணை  நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, அதிமுக பெயரையோ, சின்னத்தையோ ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.