சென்னை:

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுமார் 5ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொதுக்குழுவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்த இறுதியில் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும், தற்போதைய பரபரப்பான அரசியல்சூழ்நிலையிலும், நாளை அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண  மண்டபத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளராக  இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில், சசிகலா  அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் கட்சித் தலைமையையும், ஆட்சித் தலைமையையும் கைப்பற்ற நினைத்ததால், அதிமுக இரண்டாக உடைந்தது. இதற்கிடையில், சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடைந்த அதிமுக இணைந்து, 2017-ல் செப்டம்பர் 12-ந்தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடி, தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அதிமுக தலைமை மீண்டும் பொதுக்குழுவை கூட்டி உள்ளது. இந்த பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுஉள்ளது. மேலும்,சிறப்பு அழைப்பாளர்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொள்வார்கள் என்றும் தெரிகிறது.