சென்னை: வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்த முன்ஜாமின் கோரி அவர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர்மீது வருமானத்துக்கு மீறிய அளவுக்கு சொத்து சேர்த்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்தாக மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர் அருகே உள்ள சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவல், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடம் ரூ. 30 லட்சம்பெற்றதாகவும், ஆனால், வேலையும் கிடைக்கவில்லை, பணமும் திரும்ப தரவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய நல்லதம்பியிடம் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி விசாரணை நடத்தினார. அப்போது, ரவீந்திரனுக்கு பணத்தை திருப்பி அளித்து விடுவதாக இருவரும் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இருந்தாலும், திமுக அரசு, தன்னை கைது செய்து விடுமோ என்ற அச்சத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.