சென்னை:  அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு 19 நாட்கள் மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி, ஜனவரி  7ந்தேதி முதல் 20ம் தேதி வரை மாநிலம் முழுவதும்    மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் செய்கிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, செம்மலை, சி.வி சண்முகம், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செலவன் உள்ளிட்டோர் அடங்கிய 10 பேர் கொண்ட தேர்தல் தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 10 பேர் அடங்கிய குழு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், அதிமுக அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மண்டலம் வாரியாகச் சென்று பொது மக்களின் கருத்துக்களையும், தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய தரவுகளையும் பெறுவதற்கான சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுப்பயண திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதன்படி அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் வரும் ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை 9 மண்டலங்களுக்கு சுற்று பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். ஜனவரி 7 இல் வேலூர், சேலம், ஜனவரி 8 இல் விழுப்புரம், திருச்சி, ஜனவரி 9 இல் தஞ்சாவூர், சிவகங்கை ஜனவரி 10 ஆம் தேதி மதுரை, திருநெல்வேலி ஜனவரி 19 கோவை, ஜனவரி 20 ஆம் தேதி சென்னை ஆகிய மண்டலங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.

மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள் சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் வருகை தந்து பொதுமக்களின் கருத்துக்களை பெரும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும், கூட்டம் நடைபெறுவதற்கான மண்டபத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட கழகச் செயலாளர் முன்பதிவு செய்திட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் வரும்போது மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், நெசவு, மோட்டார் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த அனைத்து தரப்பு மக்களிடமும் அவர்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் எவை? என்று நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளை பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்குமாறு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]