சென்னை: இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய கூட்டத்தில் காரசாரமாக விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அதிமுக கூட்டணி கட்சிளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணிகளுக்கு இடையே கடுமையான விமர்சனங்கள், மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் வசைபாடி வருகின்றனர். இதற்கிடையில், சசிகலாவும், தனது பங்குக்கு ஆடியோ அரசியல் செய்து வருகிறார்.  அதிமுக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என பலரிடம் போனில் பேசி, அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி வருகிறார்.  இது மட்டுமின்றி, அதிமுகவில் இருந்து பல தலைவர்கள் மாற்றுக்கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் உள்பட பலர் திமுகவில் ஐக்கியமாகி உள்ளனர். இதனால் அதிமுக கூட்டாரம் காலியாகி வருறிது.

இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மேலும் கூட்டுறவு சங்க தேர்தலும் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூலை 9-ம் தேதி)  சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல், சசிகலா விவகாரம் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அனல்பறக்கும் விவாதங்களும், மோதல்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.