சென்னை: அண்ணா தி.மு.க. சார்பில் 20 ந் தேதி – ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கி ணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
20 ந் தேதி பெருவிழாவுக்கு அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்ன பிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
உலகளாவிய கிறிஸ்தவ ஐக்கிய திருச்சபைகள் பேராயர் டாக்டர் மனோ டேனியல் தொடக்க ஜெபம் வாசிக்கிறார். கழக அமைப்பு செயலாளரும், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான ஜே.சி.டி.பிரபாகர் வரவேற்று பேசுகிறார்.
கழக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் வேதாகமம் வாசிக்கிறார். திண்டுக்கல் மறை மாவட்ட பேராயரும், தமிழக ஆயர் பேரவை செயலாளருமான பி.தாமஸ் பால்சாமி வாழ்த்து செய்தி வாசிக்கிறார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் டி.ஜான் மகேந்திரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான பா.பென்ஜமின் ஆகியோர் கிறிஸ்துமஸ் செய்தி வாசிக்கின்றனர்.
விழாவில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பகிர்ந்து கொள்வதோடு வாழ்த்துரை வழங்குகின்றனர்.
முடிவில் கழக அமைப்பு செயலாளர் சி.த.செல்லபாண்டியன் நன்றி கூறுகிறார்.
தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபை பேராயர் டி.டேனியல் ஜெயராஜ் நிறைவு ஜெபம் செய்கிறார். இந்நிகழ்ச்சியை மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ரவி பெர்னார்ட் தொகுத்து வழங்குகிறார்.
இவ்வாறு கூறியுள்ளனர்.