சென்னை:

நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளைமுதல் விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில்,விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு வழங்கலாம்”  அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி திங்கள் கிழமை தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.

மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள் அக்டோபர் 3 ஆம் தேதியாகும்.

இதையடுத்து அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்தத் தகவல்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (செப்டம்பர் 21) டெல்லியில் அறிவித்தார்.

தமிழகத்தில் முக்கியமான கால கட்டத்தில் நடக்கும் இந்த இடைத்தேர்தல் களத்தில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதும் தொகுதியாக விக்கிரவாண்டி தொகுதி இருக்கிறது. அதே வேளையில் காங்கிரசுக்க நாங்குனேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.