சென்னை: அ.தி.மு.க ஆட்சியில் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட 1,704 அறிவிப்புகளில் 637 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டமான இன்று மனித வள மேலாண்மை துறை 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
அதில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம்” அரசுத் துறைகளில் 100% தமிழ்நாடு இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம்.
கட்சி வேறுபாடில்லாமல் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன; அதில் 1,167 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டன, 637 அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என கூறினார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக ஆட்சியில் செய்ய முடியாத, சாத்தியமில்லாத பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கைவிடப்பட்டுள்ளது. 54 துறைகளுக்கும் திட்டத்தை வகுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரவையிடம் அனுமதி வாங்கிய பிறகு தான் செலவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு உரிமை உண்டு. ஆனால், பல லட்சம் கோடிக்கு எந்தவொரு பட்ஜெட்டிலும் உட்படாத, ஏற்கனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாமல், விருப்பத்திற்கு பல திட்டங்களை அறிவித்துள்ளது. நிதி ஆதாரம் இல்லாமல் கடந்த ஆட்சியில் அறிவித்த அறிவுப்புகளுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நிதி ஆதாரம் இல்லாமலும், நிதி இல்லாமலும் அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு! சட்டப்பேரவையில் அறிவிப்பு