அகமதாபாத்
அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகள் மதவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவமனை விதிகளின் படி கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படும் வார்டுகள் இருவிதமாக தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும். ஒன்று அறிகுறி உள்ளவர்கள் மற்றொன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் என இரு பிரிவாகும். இந்த கூடத்துகளுக்குள்ளும் நோயாளிகள் தனிமையில் வைக்கப்பட வேண்டும். ஆனால் குஜராத் அரசு இந்த வார்டுகளில் இன்னொரு பிரிவினையைக் கொண்டு வந்துள்ளது.
அகமதாபாத் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு 1200 படுக்கைகள் கொண்ட தனி வார்ட் ஒன்று அமைக்கபட்டுள்ளது. இந்த வார்டை அவரவர் மத நம்பிக்கையைப் பொறுத்து இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பகுதி இந்து நோயாளிகளுக்கும் மற்றொன்று இஸ்லாமிய நோயாளிகளுக்குமாக பிரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை சூப்பிரண்ட் குன்வந்த் ராதோட்,”பொதுவாக வார்டுகள் ஆண் பெண் என இரு பிரிவாக பிர்க்கப்டுவது வழக்கமாகும். ஆனால் இங்கு கொரோனா வார்டுகள் இந்து மற்றும் இஸ்லாமியர் என பிரிக்கப்பட்டுள்ளது. இது அரசின் முடிவாகும். இதற்கான காரணத்தை அரசிடம் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில துணை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சருமான நிதின் படேல், “இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வழக்கமாக வார்டுகளை ஆண் பெண் என மட்டுமே பிரிப்பார்கள். இது குறித்து நான் விசாரிக்கிறேன்” எனக் கூறி உள்ளார். அகமதாபாத் ஆட்சியரும் அரசு அதுபோல எவ்வித உத்தரவும் இடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அந்த வார்டில் உள்ள பெயர் தெரிவிக்க விரும்பாத நோயாளி ஒருவர், “கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 2 வார்டுகள் உள்ளன. முதல் வார்டில் சேர்க்கப்பட்டிருந்தவர்களில் சிலரைப் பெயர் சொல்லி அழைத்து அடுத்த வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இது குறித்து நாங்கள் ஒரு மருத்துவமனை ஊழியரிடம் கேட்டோம். அவர் இரு பிரிவினரின் வசதிக்காக இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்” எனக் கூறி உள்ளார்.