குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் சூரத் நகரில் முறையே 250 மற்றும் 196 போலி நிறுவனங்கள் பெயரில் போலி ரசீதுகள் தயாரித்து ரூ 1760 கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி. மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.
இதுதொடர்பாக கடந்த ஜூலையில் பாவ்நகர் மண்டலத்தில் ரூ. 1000 கோடி அளவுக்கு போலி ரசீது தயாரிக்க உதவியதாக ஒரே அலுவலகத்தைச் சேர்ந்த 36 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது இதில் ஒரு இணை ஆணையர் உள்ளிட்ட இரண்டு உயரதிகாரிகளும் அடக்கம்.
இது குறித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நிரஞ்சன் படேல் குஜராத் சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சகம், அகமதாபாத் மற்றும் சூரத்தை தொடர்ந்து மற்ற நகரங்களும் இதுபோன்ற குளறுபடியில் ஈடுபட்டிருப்பதை தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டு இந்த ஆண்டு ஜூன் முடிய கடந்த மூன்றாண்டுகளில் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் மட்டும் ரூ. 3,094 கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் அரங்கேறியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதில் 58 சதவீதம் அகமதாபாத் மற்றும் சூரத் நகரில் அரங்கேறியிருப்பதாக தெரிகிறது, அகமதாபாத்தில் ரூ. 971 கோடி அளவுக்கும் சூரத் நகரில் ரூ. 789 அளவுக்கும் குளறுபடி நடந்திருக்கிறது, இதனை தொடர்ந்து பாவ்நகரில் 104 போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 433 கோடி மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக தங்கள் நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தை பெருமளவு உயர்த்திக் காட்டுவதற்கு இதுபோன்ற போலி ரசீதுகள் மூலம் மோசடி செய்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மேலும், அகமதாபாத் மற்றும் சூரத் நகரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனங்கள் மாநிலத்தின் பிற நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. மோசடி செய்வது குறித்த தகவல்களை வழங்கி இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
வரி ஏய்ப்பு மற்றும் மோசடிகளை கலைந்தெடுக்க மோடி அரசு அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குப் பின் குஜராத்தில் இருந்து மோசடி அரங்கேறிவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.