ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’.
இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘அந்தாதூன்’ படத்தின் மலையாள ரீமேக்கான ‘ப்ரம்மம்’ படத்தை ரவி கே.சந்திரன் இயக்கி வருகிறார். இதில் பிரித்விராஜ் மற்றும் மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் நாயகியாக அஹானா கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென அஹானா ‘ப்ரம்மம்’ படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ‘ப்ரம்மம்’ படத்தை தயாரித்து வரும் ஓபன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு குறித்த விவகாரங்களில் எந்தவித அரசியல் தொடர்புகளும் இல்லை . நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முழுக்க முழுக்க இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் ஆகியோரது முடிவு சார்ந்தது.
இப்படத்துக்காக நாங்கள் அஹானைவை தேர்வு செய்ய விரும்பியது உண்மை. ஆனால் ஒத்திகைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதையும் முன்பே அவரிடம் தெரிவித்து விட்டோம். நாங்கள் அவருக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்திருந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை இது பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கூறியிருந்தோம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாலும், அவர் வேறு ஒரு படத்தில் பணிபுரிந்து வந்ததாலும் ஒத்திகை தாமதமானது. ஒருவழியாக நாங்கள் போட்டோ ஷூட் நடத்திய போது, அவர் இந்த பாத்திரத்துக்கு பொருந்தமாட்டார் என்று இயக்குநர் கருதியதால் நாங்கள் அவரிடம் மன்னிப்பு கோரி மீண்டும் இன்னொரு படத்தில் பணிபுரியலாம் என்று அவரிடம் கூறினோம்.
இவை அனைத்தும் அஹானாவிடம் சரியான நேரத்தில் தெரியப்படுத்தப்பட்டது,. இதில் எந்த ஒரு அரசியல் காரணமும் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அஹானாவின் தந்தையான நடிகர் கிருஷ்ணகுமார் சமீபத்தில் பாஜகவில் இணைந்ததால் அஹானா ‘ப்ரம்மம்’ படத்திலிருந்து நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.