சென்னை: விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வேளாண் கொள்கை உருவாக்கப்படும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்து உள்ளர்.
சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் (13–ந் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இயற்கை வேளாண்மை, குறுவை நெல்சாகுபடிக்காக துறை மேற்கொண்டு வரும் பணிகள், எதிர்வரும் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் தோட்டக்கலை விளைபொருட்கள் குறிப்பாக, தக்காளி, வெங்காயம் போன்ற விளைபொருட்கள் அறுவடை
மற்றும் வேளாண்மை -உழவர் நலத்துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற விபரம், நடப்பாண்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள்சாகுபடி, பயிர் காப்பீட்டுத் திட்டம், நடப்பாண்டில் விதைகள், உரங்கள், தோட்டக்கலைத்துறை இடுபொருட்கள் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பயிர்ச்சேதங்களுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணம், பூச்சிநோய் தாக்குதலுக்கான ஆயத்த பணிகள் குறித்த விபரங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை போன்ற துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் உழவர் நலன் சார்ந்த பணிகளும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வேளாண்மையில் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்திற்கென “வேளாண் கொள்கை” ஒன்று, வேளாண் சார்ந்த அனைத்து துறைகளையும் கலந்தாலோசித்து உருவாக்கப்பட வேண்டும். குறைந்த நீரில் விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரக்கூடிய பயிர்களை சாகுபடி செய்வது, வேளாண் இயந்திரமயமாக்குதல், புதிய ரகங்களை அறிமுகப்படுத்துதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது,
உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது, வேளாண்மையில் உள்ள அனைத்து பணிகளையும் கணினிமயமாக்கி, விவசாயிகளுக்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் வழங்குவது, கால்நடை உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்த்தத் தேவையான உத்திகளை வகுப்பது போன்ற விபரங்களை உள்ளடக்கிய வேளாண்மைக் கொள்கை ஒன்று உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.