டெல்லி: அக்னிபாத் விவகாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் ராஜ்நாத் சிங் வீட்டில் நடைபெறுகிறது.
ராணுவத்தில் 4ஆண்டுகள் ஒப்பந்த முறையில்சேவையாற்றும் வகையில் ‘அக்னிபாத்’ என்னும் புதிய திட்டத்தை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டெல்லி, பீகார்,உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலுங்கானா, அரியானா போன்ற மாநிலங்கள் இளைஞர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அக்னிபாத் திட்டத்தின் நன்மைகள் குறித்து மத்திய பாதுகாப்புஅமைச்சர், ராணுவ தளபதிகள், முன்னாள் ராணுவவீரர்கள் எடுத்துரைத்தும் அதை இளைஞர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். இதையடுத்து, தற்பபோது, அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விரும்பும் வீரர்களின் வயது உச்ச வரம்பு 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவோருக்கு அசாம் ரைஃபில் படை பிரிவில் சேர 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி விவேக் ராம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டு களாக ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை. இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னிபாத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளது என்றவர், இளைஞர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, அக்னிபாத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை அதிகரிக்கப்பட்டு உள்ளது என்றும், வயது தளர்வு அறிவிப்பு இளைஞர்கள் நலன் மீதான அரசாங்கத்தின் அக்கறையை காட்டுகிறது என்றும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் தொடங்கும் என்றவர், அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.