சென்னை:
தமிழகத்தில் தனியார் பால்விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
எப்போதுமே, அரசு நிறுவனமான ஆவின் பாலை விட தனியார் பால் விலை அதிகமாகவே இருந்க்கும். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் தனியார் பால் விற்பனை விலை மேலும் அதிகரிக்கப்பட்டது. இப்போது திருமலா நிறுவனம் மீண்டும் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து இருக்கிறது.
இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அச்சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்திருப்பதாவது:
“தமிழகத்தில் ஏற்கனவே இருந்து வரும் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்யா நிறுவனம் கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் முதல் வாரத்தில் தங்களுடைய பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 வீதம் மொத்தம் ரூ.4 வரை உயர்த்தியது. இதே போன்று பன்னாட்டு
பால் நிறுவனமான திருமலா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்த வித முன்னறிவிப்பும் வெளியிடாமல் 200 கிராம் தயிர் பாக்கெட்டில் 0.25 அளவை குறைத்து ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் 57 காசுகள் வரை மறைமுகமாக விலையேற்றத்தை மக்கள் மீது திணித்தது. அத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் பால் விற்பனை விலையையும் உயர்த்தியது.
மற்ற தனியார் பால் நிறுவனங்களும் தங்களது பால் மற்றும் தயிருக்கான விலையை ஒரு சில நாட்களில் உயர்த்தும் ஆபத்து உள்ளது. எனவே இந்த தனியார் பால் விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பால் விற்பனை விலை உயர்வை தடுத்து நிறுத்திட வேண்டும்” என்று தனது அறிக்கையில் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.