சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சுவாதி, மைசூரில் வேலை பார்த்தபோது இன்போசிஸ் நிறுவனம் மற்றும் ராணுவ ரகசியங்களை சுவாதி சட்டவிரோதமான முறையில் விற்றதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தாயார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளரான சுவாதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் முதலில் திணறிய காவல்துறையினர் பிறகு, ரயில் நிலையம் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர். .
ஆனால், ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை. காவல்துறையினர், வழக்கை விரைந்து முடிக்க ராம்குமாரை பலிகடா ஆக்க முயலுகின்றனர் என அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
ஒரு தலைக் காதல் தோல்வி காரணமாக தொடர்ந்து இந்த கொலை சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டாலும், தொடர்ந்து வழக்கில் பல்வேறு முடிச்சுக்கள் அவிழ்க்கப்படவில்லை.
இந்த நிலையில், சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
“சுவாதி கொலை வழக்கு குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஆறு தனிப்படை அமைக்கப்பட்டது. 14 சிம் கார்டுகள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கவல்துறையினர் முதலில் தெரிவித்தனர்.
சுவாதியின் நண்பர் பிலால் சித்திக் மீது சந்தேகம் உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரிடம் 4 நாட்கள் போலீஸார் விசாரணை நடத்தினர். . குறிப்பாக பெங்களூருவில் கொலை தொடர்பான ஆதாரங்களைத் திரட்டினர். ஆனால் இது தொடர்பான உண்மையை காவல்துறையினர் மறைக்கிறார்கள்.
சம்பவம் நடைபெறுவதற்கு 17 நாட்களுக்கு முன்பாக சுவாதியை அடையாளம் தெரியாத ஒருவர், அதே ரயில் நிலையத்தில் தாக்கியதைப் பயணி ஒருவர் பார்த்துள்ளார். அது குறித்த மர்மம் நீடிக்கிறது.
மேலும் இதே வழக்கில் மதுரை மற்றும் ஒட்டன்சத்திரத்தில் 2 பேரைக் கைது செய்துள்ளதை காவல்துறையினர் வெளியிடவில்லை.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை சுவாதி காதல் திருமணம் செய்து மதம் மாறியுள்ளதாக பெங்களூரு சென்ற போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சுவாதி மரணம் குறித்து தன் குடும்பத்தினரிடம் விசாரிக்க வேண்டாம் என சுவாதியின் தந்தை முதல்வரின் தனிப் பிரிவில் மனு கொடுத்துள்ளார். எனவே சுவாதி குடும்பத்தாரிடம் காவல்துறையினர் சரியாக விசாரணை நடத்தவில்லை. சுவாதியை ஒருவர் கடுமையாக தாக்கியதாகவும், அதை சுவாதி பொறுத்துக் கொண்டதாகவும் சுவாதியின் தோழி ஒருவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இது குறித்தும் ஆராயவில்லை.
பெங்களூருவில் சுவாதி பணியாற்றிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ரகசியங்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை சுவாதி விற்றதாக பெங்களூருவில் உள்ள தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது பெங்களூரு சென்ற தனிப்படை போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தக் கொலையில் பல உண்மைகளை காவல்துறையினர் மறைத்துவிட்டனர். வேண்டுமென்றே எனது மகன் ராம்குமாரை குற்றவாளியாக்கியுள்ளனர். மோசமான புலன் விசாரணை நடந்து வருகிறது. தமிழக போலீஸார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தப்பிவிடுவர். ஆகவே இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்” என்று ராம்குமாரின் தாயார் புஷ்பா, தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை சம்பவத்தை யாருமே செல்போனில் படம் பிடிக்கவில்லை என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், ரயில் நிலையத்தில் இருந்த சிலர் சம்பவத்தை படம் பிடித்ததாகவும், போலீசில் புகார் அளித்ததாகவும் புஷ்பா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சுவாதி கொலையில் காதல் விவகாரம் மட்டுமின்றி, அவர் ராணுவ ரகசியங்களை விற்றதும் காரணமாக இருக்கலாம் என புஷ்பா சந்தேகம் தெரிவித்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.