சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள், தங்களது வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே, அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது, 11 – 49 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை.
நீண்ட காலமாகவே, இது குறித்து சர்ச்சை கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தல் நிலுவையில் இருக்கிறது.
சபரிமலைக்கு பெண்கள் வர ஏன் அனுமதிக்கக் கூடாது’ என, கேரள மாநில அரசிடமும், திருவாங்கூர் தேவசம் போர்டிடமும் விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்தியில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, வருடம் தோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடக்கும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு வழிபாட்டை காண்பதற்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் வரும் போது அவர்களது வயது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுன் விவாதங்கள் நடக்கிறது. இதைத் தவிர்க்க, 10 வயதுக்குட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களது வயது சான்றிதழை கொண்டுவர வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைள் துவங்கும் இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.