சித்தர்கள் பலர் இருப்பினும் 18 சித்தர்கள் பற்றிய தகவல்களே அதிகம் கிடைத்துள்ளன.
நாம் இந்தத் தொடரில் ஒவ்வொரு சித்தரைப் பற்றியும் அறிந்துக் கொள்வோம்
சித்தற்களில் முதல் சித்தராக அறியப்படுபவர் அகத்தியர். இவர் சப்தரிஷிகளில் ஒருவரும் ஆவார். சிவபெருமான் – பார்வதியின் திருமணத்தைக் காண அனைவரும் கைலாயத்தில் கூடியதால் உலகமே வடக்கு பக்கம் சாய்ந்து விட்டது. அப்போது அனைவருக்கும் சமமாக இருக்கக் கூடிய ஒரே ஒருவர் என சிவனால் புகழப்பட்டு அவரை தென் திசைக்கு சிவ பெருமான் அனுப்பி வைக்கிறார். அவர் உலகின் தெற்கு முனைக்கு வந்ததும் உலகம் சமமாகி விடுகிறது. அகத்தியர் வேண்டுகோளுக்கிணங்கி அங்கிருந்தே சிவனின் திருமணத்தை காணும் பாக்கியத்தை சிவன் அளித்துள்ளார்.
முருகப் பெருமான் மூலம் தமிழ் மொழியை இவர் கற்று இந்த உலகுக்கு அளித்ததாக சொல்லப்படுகிறது. அதனால் தான் முருகன் தமிழ்க் கடவுள் என வணங்கப் படுகிறார். தமிழுக்கு அகத்தியம் என்னும் இலக்கண நூல் எழுதியுள்ளார். ஆனால் இவருடைய சீடரான தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலே தற்போது உள்ளது. அகத்தியம் காலப் போக்கில் மறைந்து விட்டது.
இவர் எழுதிய பல சூக்தங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. இவர் தினை மாவு, பயனளிக்கும் பல தானிய வகைகள், தர்ப்பைபுல் போன்ற பலவற்றை பற்றி ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆக தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர் அகத்தியர் என்பது புலனாகிறது. அது மட்டுமின்றி பல சித்த வைத்திய நூல்களும் இயற்றி உள்ளார்.
அகத்தியரின் மனைவியின் பெயர் லோபா முத்திரை. அகத்தியர் உருவத்தில் குள்ளமாக இருந்ததால் குறுமுனி என புகழ் பெற்றவர் ஆவார். இவர் தென் திசை செல்லும் போது இவரைக் கண்டு ஏளனம் செய்த விந்திய மலை வானளவு உயர்ந்து இவரை செல்ல விடாமல் தடுத்தது. இவர் விஸ்வரூபம் எடுத்து அதை அடக்கினார். பின்பு அவர் கூறியதற்கிணங்க விந்தியமலை தனது வளர்ச்சியை நிறுத்திக் கொண்டது. தாம் மீண்டும் வடதிசை செல்லும் வரை வளரக்கூடாது என்னும் அவர் உத்தரவுக்கிணங்க அதற்குப் பின் வளராமல் இருக்கிறது.
ஒரு முறை இவரை பொன்னி நதி ஏளனம் செய்ய அதனால் அவர் தனது கமண்டலத்தினுள் அடக்கி வைத்து விட்டார். மக்கள் நீரின்றி வாடவே விநாயகர் காக்கை உருவில் வந்து அந்த கமண்டலத்தை தட்டி விட நீர் ஆறாக ஓடியது. பிறகு விநாயகரின் சொல்லுக்கிணங்கி அவர் பொன்னி நதியை மன்னித்து மீண்டும் கமண்டலத்தில் அடைக்கவில்லை. காகம் தட்டிவிட்டு விரிந்து ஓடியதால் பொன்னி நதி புதிய பெயரான காவிரி என்னும் பெயரில் அழைக்கப்பட்டது.
இது தவிர அகத்தியர் தனது இசையால் ஏழிசை வேந்தன் ராவணனை வென்றுள்ளார். இந்திரனின் மகனும் ஊரிவசியும் இந்திரசபையில் பிழை செய்ததால் பூமியில் பிறக்கும் படி செய்துள்ளார். வாதாபி, வில்லாளன் ஆகிய இரு அரக்கர்களை அழித்துள்ளார்.
இவர் சமாதி அடைந்த இடத்தைப் பற்றி தெளிவாக தெரியவில்லை. திருவனந்தபுரத்தில் சமாதி அடைந்ததாகவும், கும்பேசுவரர் கோயிலில் சமாதி அடைந்ததாகவும், பாபநாசத்தில் சமாதி அடைந்ததாகவும் வரலாறுகளில் உள்ளன. எது உண்மை என யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.