சுல்தான்கஞ்ச்
பீகார் மாநிலம் சுல்தான் கஞ்ச் பகுதியில் புனரமைப்பு பணி நடந்துக் கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பீகாரில் கடந்த இரண்டு மாதங்களில் 14 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இது தொடர்பாக 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இர் மாதங்களில் கிஷன்கஞ்ச், அராரியா, கிழக்கு சம்பாரண், சிவன், சரண் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்தன.
எனவே அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அவா் பாலங்களுக்கான பராமரிப்பு கொள்கையை உடனடியாக தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
கடந்த ஆண்டு பீகாரில் கங்கை நதியின் மீது இருந்த அகுவானி – சுல்தான்கஞ்ச் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலத்தை புணரமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இன்று காலை 8 மணியளவில் திடீரென கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் மீதி பகுதிகளும், இடிந்து விழுந்தன.
மாவட்ட நீதிபதி அமித் குமார் பாண்டே, கட்டுமானத்தில் உள்ள பாலத்தின் முழு கட்டமைப்புமே தவறானது என்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஒப்பந்ததாரர், கட்டமைப்பை அகற்றி வருகிறார் எனவும், இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.