சென்னை: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது 10வது முறை என கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் கல்லூரி, பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நேற்று ( 12ந்தேதி) சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில், விரைந்து சென்ற காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதுவரை மேற்கொண்ட சோதனையில் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் மாணவர்கள் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2 மாதங்களில் 10 வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.