டமாஸ்கஸ்:

சிரியாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் 126 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.

கடந்த வாரம் சிரியா நடத்திய ரசாயன  தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போருக்கு பயந்து,  பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 112 பேர் உயிரிழந்தனர்.

உள்நாட்டுப் போரினால் சிரியாவில் இதுவரை 3 லட்சம் அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு மற்றும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு போர்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலெப்போவில் வெளியேறத் தொடங்கினர். அவர்கள்  அல் ரசிதீன் என்ற இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்தில் ஏறி காத்திருந்தனர்.

அப்போது அந்த பகுதிக்கு காரில் வந்த பயங்கரவாதிகள் சிலர், பேருந்துகளின் மீது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதலில்  70 குழந்தைகள் உள்பட பெண்கள் என 126 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.