சென்னை: நேற்று பக்தர்களின்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வடபழனி முருகன் கோயிலில்  இன்று முதல் பக்தகர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதுடன், ஞாயிறு முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று  சென்னை வடபழனி முருகன் கோயிலில்  கும்பாபிஷேகம் திட்டமிட்டபடி நடைபெற்றது.

பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அமைச்சர் சேகர்பாபு மற்றும் கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 108 சிவாச் சாரியார்கள், கோயில் நிர்வாகிகள்  கும்பாபிஷேகம் விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி ஆன்லைன் ஒளிபரப்பும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றுமுதல், வியாழக்கிழமை வரை வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. குடமுழுக்கு நடைபெற்று 40 நாட்களுக்குள் கோவிலுக்கு செல்வது நன்மை பயக்கம் என்பதால், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.