சென்னை: தமிழ்நாட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 25% எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவருதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அவசியம். அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஜிப்மர், எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு 15 சதவீத இடங்கள் ஆகியவற்றுக்கு மருத்துவ கலந்தாய்வு குழு (எம்.சி.சி.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அகில இந்திய அளவில் நடத்துகிறது.

3 சுற்றுகளாக நடக்கும் இந்த கலந்தாய்வில் இரண்டு சுற்றுகள் முடிவடைந்து உள்ளன. மீதமுள்ள இடங்களில்  இறுதிச் சுற்றில் நிரப்பப்பட இருக்கின்றன.  இதுதொடர்பாக முக்கிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டன.  அதன்படி, முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்தவர்கள், 3-வது சுற்று வரை அதனை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு முன்பு வரை 2-வது சுற்று வரை மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கு பெற்று ஒதுக்கீடு பெற்றவர் அந்த இடங்களில் சேராமல் போனால் அந்த நபருக்கு ஓராண்டு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு இருந்த முந்தைய விதிகளில் 2 ஆண்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முன்பு நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கலந்தாய்வு முடிவுக்குப் பிறகு மீதமுள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்த நடைமுறை இந்த ஆண்டு மாற்றப்பட்டு, காலியிடங்கள் திருப்பி அளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில்,  இரண்டு சுற்று மருத்துவ கவுன்சிலிங்கிற்குப் பிறகு, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 25% எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டில் 835 இடங்கள் சரணடைந்தன, அவற்றில் 216 இடங்கள் காலியாக உள்ளன, இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 22, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 15, இஎஸ்ஐசியில் 14, திருநெல்வேலியில் 12, கோவை மருத்துவக் கல்லூரிகளில் 11 என மொத்தம் 216 இடங்கள் காலியாக உள்ளன.

நிரப்பப்படாமல் உள்ள இடங்களைத் திருப்பித் தருமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது, இதனால் அவற்றை நிரப்பவும், வீணாகாமல் இருக்கவும் முடியும். ஆனால், கடந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடத்தை மத்திய அரசு திருப்பி தராததால்,   8 இடங்கள் வீணாகின. அதுபோல நிலை ஏற்படுவதை விட, நிரப்படாத இடங்களை மாநிலஅரசுக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.