பாட்னா: பிரமதர் மோடி, பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுள்ள நிலையில், டிவிட்டர் சமூக வலைதளத்தில் மீண்டும் #GobackModi ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது. ஏற்கனவே, தமிழகம், கேரள மாநிலத்தில் மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GobackModi டிரெண்டிங்கான நிலையில், தற்போது மீண்டும் டிரெண்டிங்காகி உள்ளது.
பீகார் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 3கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்ட தேர்தல், அக்டோபர் 28ந்தேதி 71 தொகுதிகளுக்கும், 2வது கட்ட தேர்தல் நவம்பவர் 3ந்தேதி 94 தொகுதிகளுக்கும், 3வது கட்ட தேர்தல் நவம்பர் 7ம் தேதி 78 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ந்தேதி நடைபெறுகிறது. தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ்குமார்), பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி இன்று பீகார் சென்றுள்ளார். அங்கு . சாசரம் என்ற இடத்தில் நடக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் உரையாற்றினர்.
மோடி பேசும்போது, பிகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களின் பெயர்களின் முதலெழுத்துகளை இணைத்து பீமாரு மாநிலங்கள் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. பீமார் என்ற இந்தி சொல்லுக்கு உடல் நலம் குன்றிய என்ற பொருளும் உண்டு. இந்த வழக்கத்தைத் தொட்டுப் பேசிய மோதி, பிகாரை பீமார் ஆக்கியவர்களை, அதாவது நலம் குன்றியதாக ஆக்கியவர்களை மீண்டும் அனுமதிப்பதில்லை என்று லல்லுபிரசாத் கட்சியை சாடினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புரிமை தரும் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று கூறுகிறவர்கள் பிகார் மாநிலத்தில் வாக்கு கேட்பதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும் என்று கேள்வி எழுப்பிய பிரதமர், பீகாரின் புதல்வர்கள் புல்வாமா தாக்குதலிலும், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படையினரால் தாக்கப்பட்டதிலும் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பீகார் வருகையை ஒட்டி டிவிட்டரில் #GobackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது. திடீரென கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், டெல்லியில் இருந்து பலநூறு கிலோமீட்டர் தூரம் நடந்தே பீகார் திரும்ப நேரிட்டதையும், அதுதொடர்பான புகைப்படங்களை பலர் பதிவிட்டு, #GobackModi ஹேஷ்டேகுடன் இணைத்துப் பகிரப்பட்டன.
ஏற்கனவே, மோடி அரசால் தமிழகம் புறக்கணிக்கப்வபடுவதை கண்டித்து, அவர் தமிழகம் வரும்போதெல்லாம் #GobackModi ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி வந்த நிலையில், தற்போது பீகாரிலும், #GobackModi டிரெண்டிங்காகி உள்ளது.