சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது முதல் இதுவரை 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர் என்பது தகவல் பெறும் உரிமை சட்டப் படி எழுப்பப்பட்ட கேள்விக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு முதல் நீட்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வை மாநில முதல்வராக இருந்த மோடி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் பிரதமரானதும் நீட் தேர்வு கட்டாயம் என மாநில அரசுகளின் எதிர்ப்பை மீறி அமல்படுத்தினார். மத்தியஅரசின் நீட் தேர்வு மத்திய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால், மாநில மொழிகளில் படித்து வரும் மாணாக்கர்கள் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை உருவாகி யுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கிராமப்பகுதி மாணாக்கர்களின் மருத்துவர் கனவு சிதைந்துப்போகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மத்தியஅரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மத்தியஅரசு கடிதம் எழுதியும், இருமுறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் மத்தியஅரசுக்கு அனுப்பப்பட்டது.
மருத்துவக் கல்வியில் இளநிலை மற்றும் மேற்படிப்பு இரண்டுக்கும் “நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. தமிழக அரசும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஜிப்மர், எய்ம்ஸுக்கு “நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மேலும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால், ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், நவம்பர் 23-ம் நாள் நீட் தேர்வு தமிழத்தில் செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற அரியலூர் மாவட்டத்தைச் மாணவி அனிதா, தேர்வை எதிர்கொள்ள முடியாமல் 2017 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுததியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியற்கட்சிகள், சமுதாய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் “நீட்” தேர்வின் போது தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் இராஜஸ்தான் மற்றும் கேரளாவில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு அங்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றங்களும் கண்டனம் தெரிவித்தன.
தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பம் நீடித்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இளநிலை மருத்துவக் கல்விச் சேர்க்கை எதன் அடிப்படையில் நடைபெறும் என்பது தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இவற்றில் மொத்தம் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் 85 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர் சிறப்பு கல்வி (எம்சிஎச், டிஎம்) படிப்புக்கு 192 இடங்கள் உள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு வரை தமிழக மருத்துவர்கள் மட்டுமே உயர்சிறப்புக் கல்வி பிரிவில் சேர்ந்து பயின்று வந்த நிலையில் தற்போது 192 இடங்களுக்கும் “நீட்’ தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளதால், இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 19 மருத்துவர்கள் மட்டுமே உயர்சிறப்புக் கல்வியில் சேரமுடிந்துள்ளது. இதர இடங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தைச்சேர்ந்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, தமிழகஅரசு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேரும் வகையில் சட்டதிருத்த மசோதா இயற்றியுள்ளது. அதன்படி, தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றால், அவர்கள் மருத்துவம் பயிலும் வகையில், 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்துக்கு கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்.
இந்த நிலையில், நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தகவல்பெறும் உரிமைச் சட்டப்படி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். அவரது மனுவில், 2015-2016 முதல் 2018-19ம் ஆண்டு வரை எத்தனை அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என தெரிவிக்கும்படி கோரியிருந்தார்.
இதற்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் பதில் தெரிவித்துள்ளது. அதில்,
கடந்த 2015-2016 மற்றும் 2016-2017-ல் மட்டும் 1,047 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
2017-ம் ஆண்டில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின், 158 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு கட்டாயம் என அமல்படுத்தப்பட்டபிறகு,கடந்த 3 ஆண்டுகளில் வெறும் 158 மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்தும், அவற்றின் மூலம் 3,350 பேர் மருத்துவம் படிக்கும் வகையில் வசதிகள் இருந்தும், வெறும் 158 பேர் மட்டுமே மருத்துவத்தில் சேர்ந்திருப்பது மத்தியஅரசின் எதேச்சதிகார போக்கை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
கட்டுரையாளர்: ATSPandian