டெல்லி: ராகுல்காந்தி டிவிட்டர் கணக்கு ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு  உள்பட மேலும் 5 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறியுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டிவிட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சமூக வலைத்தளமான டிவிட்டர் சமூக வலைதளத்தல்  ஆக்டிவாக இருந்து வருகிறார். மோடி அரசு மீதான பல்வேறு விமர்சனங்களை அவர் டிவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.  எதிர்கட்சி என்ற வகையில் அரசின் மீதான கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால், அவரது கணக்கை லட்சக்கணக்கானோர் பாலோ செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் 9 வயதான தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.அது தொடர்பாக அந்த குழந்தையின் பெற்றோர்களை சந்தித்து பேசிய ராகுல்காந்தி, அதுதொடர்பாக புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டார். இது விதியை மீறிய செயல் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுலின் கணக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது.

இதையடுத்து, ராகுல்காந்தியின்  டிவிட்டர் கணக்கை ஆகஸ்டு 7ந்தேதி டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது இந்த நிலையில் தற்போது தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு மேலும் 5 காங்கிரஸ் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்புத்துறையின் செயலாளர் வினித் பூனியா பதிவிட்டுள்ள டிவிட்டில், “ ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், பொதுச்செயலாளருமான அஜெய் மகான், கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாக்கூர், அசாம் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என தெரிவித்து உள்ளார்.

மேலும்,  அனைத்து தவறுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடும். டடி விட்டரில் எங்களை முடக்குவதன் மூலம் போராடுவதை தடுத்துவிடலாம் என மோடி நினைக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.