தேனி,

ச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் பெரியார் அணையை மூவர் குழு ஆய்வு செய்து வருகிறது.

ஏற்கனவே தமிழக அரசு தொடர்ந்த வழக்கு காரணமாக,  உச்சநீதி மன்றம்  முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம், என்றும்  பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என  உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து உச்சநீதி மன்ற உத்தரவின்பேரில்,  அணையின்  மராமத்து பணிகள்  மற்றும் கண்காணிப்பு பணிக்காக  மூவர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் தலைவரா  மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நாதன் நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் ஓய்வு பெற்றதால், அவருக்கு பதில் புதிய ஆணையர் நியமிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது,  மத்திய நீர் வள ஆணையத்தின் அணைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் முதன்மை பொறியாளர் பி.ஆர்.கே.பிள்ளை புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மூவர் குழுவுடன் தமிழகம் மற்றும் கேரள மாநில வல்லுநர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் இன்று பெரியார் அணையை பார்வையிட்டனர்.

சுமார் 16 மாதங்களுக்கு பிறகு, தற்போதுதான்  முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மூவர் குழு பேபி அணை, ‌ஷட்டர் பகுதி, நீர் இருப்பு, வரத்து, கசிவு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

குழுவினர் ஆய்வுக்கு வருவதையொட்டி,  அணை மராமத்து பணிகள் நடைபெற்றன. மேலும்,  பேபி அணையில் இருந்து பெரியாறு அணை வரை கல் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்றன.

அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் முடிவுற்ற பிறகு, மாலையில் மூவர் குழு பிரதிநிதிகள் மற்றும் தமிழக, கேரள அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அப்போது இரு மாநிலம் சார்பாகவும் பல கோரிக்கைகள் வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.