தங்க கத்தரிக்கோலால் முதல் வாடிக்கையாளருக்கு ‘ஹேர்கட்டிங்’’..
ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த சலூன் கடைகள், அழகு நிலையங்கள் இரு தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டுள்ளன.
பசி-பட்டினியுடன் உழன்ற சலூன் கடை உரிமையாளர்கள் மற்றும், ஊழியர்கள் முகத்தில் கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கு பிறகு இப்போது தான் மலர்ச்சியைக் காண முடிகிறது.
கோலாப்பூரில் உள்ள சலூன் கடை உரிமையாளர் ராம்பூ சங்பால் என்பவர், இந்த சந்தோஷத்தை புது விதமாகக் கொண்டாட நினைத்தார்.
தனது பல வருட உழைப்பில் சேமித்த பணத்தைக் கொண்டு, அவர், தங்கக் கத்தரிக்கோல் ஒன்றை வாங்கி வைத்துள்ளார்.
குழந்தைகளுக்கு மொட்டை போடும் வைபவங்களில், தங்கக் கத்தரிக்கோலைப் பயன்படுத்துவது ராம் பூவின் வழக்கம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் சலூன் கடையைத் திறந்த ராம்பூ, தன்னிடம் முடிவெட்டிக் கொள்ள வந்த முதல் வாடிக்கையாளருக்கு , தங்கக் கத்தரிக்கோலால் ‘ஹேர்கட்டிங்’’ செய்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்.
‘’ மூன்று மாதங்களாக சலூன்கடை மூடிக்கிடந்ததால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் பல சவரத்தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர்’’ என்று துக்கத்துடன் தெரிவித்த ராம்பூ’’ நீண்ட நாட்களுக்குப் பிறகு சலூன் கடைகளைத் திறக்க அரசு அனுமதி தந்துள்ளதால் , அந்த மகிழ்ச்சியை வித்தியாசமாகக் கொண்டாட வேண்டும் என நினைத்தேன். எனவே முதல் வாடிக்கையாளருக்குத் தங்கக் கத்தரிக்கோலால் முடிவெட்டினேன் என்று பூரிக்கிறார்,’’ ராம்பூ.
-பா.பாரதி.