டோக்கியோ:
உலகிலேயே மிக குறைந்த எடையுள்ள ஆண் குழந்தை 5 மாத தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியது.

கடந்த 2018-ம் ஆகஸ்ட் மாதம் டோக்கியோ கெய்யோ மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை, உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது.
குழந்தை பிறந்ததும் கையில் வாங்கிய தாய்க்கு அதிர்ச்சி. ஒரு திராட்சைப் பழம் எவ்வளவு எடை இருக்குமோ, அதைவிடச் சற்று அதிக எடை.
கர்ப்பிணியாக இருந்தபோது 24வது வாரத்தில் குழந்தை வளர்ச்சியே இல்லாமல் போனதால், அந்தப் பெண் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்தார்.
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தாக்கேஸ் அரிம்த்ஸு கூறும்போது, “இதுவரை எடை குறைவான குழந்தை என்ற சாதனையாக 9.67 அவுன்ஸ் எடையுடன் 2009-ம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைதான் இருந்தது.
தற்போது இந்த குழந்தையின் எடை 9.45 அவுன்ஸ். இது உலக சாதனை. கடந்த 1936-ம் ஆண்டிலிருந்து இன்று எடை குறைந்து 23 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
சராசரி எடை 10.58-ஆக இருந்தது. இதில் 19 பெண் குழந்தைகள் ஆவர். பெண் குழந்தையிலேயே எடை குறைவான குழந்தை கடந்த 2015-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தது. அந்த குழந்தையின் எடை 8.89 அவுன்ஸ்.
ஜப்பானை பொருத்தவரை இதேபோன்று எடை குறைவான குழந்தைகள் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 10 சதவீதமாக உள்ளது.
இங்கு பிறந்த ஆண் குழந்தை 5 மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டது. அதன்பின் குழந்தையின் எடை 7.1 பவுண்டாக உயர்ந்தது.
அந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளது. கடந்த பிப்ரவரி 20-தேதி டிஸ்சார்ஜ் செய்துவிட்டோம் என்றார்.