அகர்தலா:

திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, இடதுசாரிகளின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர். தேர்தல் முடிவு வெளியான அடுத்த ஒரு சில நாட்களிலேயே திரிபுராவில் வன்முறை வெடித்துளளது. பாஜக மற்றும் இடதுசாரி தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.

பெலோனியா நகரில் உள்ள லெனின் சிலையை ஜேசிபி எந்திரம் மூலம் பாஜக தொண்டர்கள் சிலர் அகற்றினர். அப்போது பாரத் மாதா கீ ஜே என்று அவர்கள் கோஷமிட்டனர். ‘‘இது கம்யூனிசம் மீதான பயத்தை காட்டுகிறது’’ என்று இடதுசாரி கட்சியினர் கருத்து தெரிவித்தனர். ஆனால், ‘‘இடதுசாரிகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் லெனின் சிலையை அகற்றினர்’’ என்று பாஜக தெரிவித்தது.

‘‘தேர்தல் முடிவு வெளியான ஒரே இரவில் இடது சாரி தொண்டர்களுக்கு எதிராக 200 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளது’’ என்று அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அக்கட்சியின் செயலாளர் பிஜன் தார் கூறுகையில், ‘‘நேற்று வரை 514 தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 196 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 134 கட்சி அலுவலங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 64 அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 208 அலுவலங்களை பாஜக ஆதரவாளர்களும், ஐபிஃஎப்டி தொண்டர்களும் ஆக்ரமித்துள்ளனர்’’ என்றார்.

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறுகையில், ‘‘ லெனின் வெளிநாட்டுக்காரர். அதோடு அவர் ஒரு தீவிரவாதி. ரஷ்யாவில் பல மக்களை கொன்றுள்ளார். அது போன்ற ஒரு நபரின் சிலை இ ந்தியாவில் இருக்க வேண்டுமா?. அந்த சிலை உடைக்கப்படவில்லை. அது சிபிஎம் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பாஜக.வினரில் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் ஆகியோர் கொல்கத்தால் கண்டன பேரணி நடத்தினர். வன்முறை நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.