அகமதாபாத்:

சமூக வளைதளங்களில் காங்கிரஸ் கட்சியின் பாஜ விரோத பிரச்சாரத்திற்கு குஜராத் இளைஞர்கள் இரையாகிவிட வேண்டாம். அதோடு பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 20 சதவீத ஊழல் பணம் பொருளாதாரத்திறகு கொண்டுவரப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்.

அகமதாபாத்தில் யுவா டவுன்ஹாலில் நடந்த இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பாஜ ஆட்சியில் வளர்ச்சியின் முன் மாதிரியாக குஜராத் மாநிலம் விளங்குகிறது. இதை சிதைக்கும் வகையிலான குறுஞ்செய்திகள் சமூக வளைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றின் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இதை இளைஞர்கள் கண்மூடித்தனமாக நம்பிவிட வேண்டாம். பாஜ ஆட்சிக்கு வருவதற்கு முன் குஜராத்தின் நிலை குறித்து ஆராயாமல் எவ்விதமான ஒரு முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். இந்த பிரச்சாரம் எதிர்கட்சியான காங்கிரஸ் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘ விவசாயத் துறை வளர்ச்சி, தனி நபர் வருவாய் அதிகரிப்பு, மாநில நிதிநிலை அறிக்கை மதிப்பீடு அதிகரிப்பு, பல்லைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இது போன்று பல்வேறு வளர்ச்சிகள் 1995ம் ஆண்டுக்கு பின்னரே ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் 1995ம் ஆண்டு தான் பாஜக முதன் முதலில் ஆட்சிக்கு வந்தது. அதனால் பாஜக ஆட்சிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை கணக்கிட்டு எத்தகைய மேம்பாட்டை குஜராத் அடைந்துள்ளது என்பதை எண்ணி பார்க்கவேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளின் விபரங்கள் அனைத்து பாஜக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை சமூக வளைதளத்தில் பகிர்ந்து பொய் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஊரடங்கு மற்றும் வகுப்புவாத கலவரம் ஏற்பட்டது. ரத யாத்திரை தாக்கப்பட்டது. 10 முதல் 15 மணி நேர மின் வெட்டு இருந்தது. ஆனால், தற்போது அனைத்து பகுதிகளும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.

சமீபத்தில் ராகுல்காந்தி சபர்மதி ஆற்றின் முன் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் சபர்மதி ஆறு கழிவு நீர் ஓடும் ஆறாக இருந்தது. ஆனால் தற்போது உலகளவில் சிறந்த நதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டுக்கு முன் தனி நபர் வருமான ரூ. 13,665 என இருந்தது. தற்போது ரூ.1.41 லட்சமாக உள்ளது. இது ராகுலுக்கு வளர்ச்சியாக தெரியவில்லையா?. காங்கிஸ் மற்றும் அதன் தலைவர்களின் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம்’’ என்று அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

‘‘வேலைவாய்ப்பு என்பது பணியை மட்டும் சார்ந்தது கிடையாது. 125 கோடி குடிமகன்களுக்கும் வேலை அளித்து விட முடியாது. சுயதொழிலும் வேலைவாய்ப்பு தான். சிறு தொழில்கள் தொடங்குவதும் இதில் அடங்கும். ஆனால் வேலை மட்டுமே வேலைவாய்ப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது மாற வேண்டும். வர்த்தகர் நலன் சார்ந்த வரி விதிப்பு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் 99 சதவீதம் பணம் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

முன்பு 80 சதவீத பணம் மட்டுமே பொருளாதாரத்தில் இருந்தது. 20 சதவீதம் பணம் ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் வசம் இருந்தது. தற்போது இந்த பணம் பொருளாதாரத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்புக்கு முன் 3.6 கோடி பேர் வருமான வரி செலுத்தினர். தற்போது 6.3 கோடி பேர் வருமான வரி செலுத்துகின்றனர்’’ என்று அமித்ஷா பேசினார்.