டில்லி:
காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்கவுள்ளார் அதற்கான நேரம் நெருங்கிவிட்டது சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக ராகுல் காந்தியும் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்தது.
இதனால் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் கட்சி தலைமை பொறுப்பேற்க தயக்கம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டி.வி. சேனல் ஒன்றுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று பேட்டி அளித்தார். அப்பேபாது அவர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
அதற்கான நேரம் நெருங்கிவிட்டது. அது விரைவில் நடக்கும். அதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. தீபாவளி முடியும் வரை பொறுத்திருங்கள்’’ என்றார். சோனியாவின் இந்த பேட்டி வாயிலாக காங். தலைவராக ராகுல் பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சீத்தாராம் கேசரி இருந்தார். அதன் பிறகு சோனியா காந்தி பொறுப்பேற்றார். தொடர்ந்து 19 ஆண்டுகளாக தலைவராக இருந்து வருகிறார். குஜராத், இமாச்சல் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல்களில் ராகுலை முன்வைத்து பிரசாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.