டில்லி
டில்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் தேசிய செயலர் மது கவுத் யஸ்கியின் புகாருக்குப் பிறகு கொரோனா தனிமை முத்திரை மை மாற்றப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும் என்பது கொரோனா விதிகளில் ஒன்றாகும். அனைத்து சர்வதேச விமான நிலையங்கள் மூலம் இந்தியா வரும் அனைவருக்கும் கைகளில் முத்திரை ஒன்று பதியப்படுகிறது. அதில் அவர்கள் எத்தனை நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்னும் விவரங்களும் உள்ளன.
கடந்த மூன்றாம் தேதி காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் மது க்வுட் யஸ்கி வெளிநாட்டில் இருந்து டில்லிக்குத் திரும்பினார். அவருடைய கையில் தனிமை முத்திரை பதியப்பட்டது. அப்போதிலிருந்து அவருக்குக் கையில் அரிப்பு மற்றும் வலி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுட் தனது டிவிட்டர் மூலம் டில்லி விமான நிலைய அதிகாரிக்குப் புகார் அனுப்பினார்.
இதற்கு டில்லி விமான நிலைய அதிகாரி, “தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம். அந்த மையை தற்போது பயன்பாட்டில் இருந்து நிறுத்தி தனியே வைத்துள்ளோம். புதிய மையை பயன்படுத்தி வருகிறோம். தனியே வைக்கப்பட்ட மையைச் சோதனை செய்த பிறகு அந்த மையை அளித்த வினியோகஸ்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” எனப் பதில் அளித்துள்ளார்.