ஸ்ரீரீநகர்
கடந்த 5 ஆம் தேதி முதல் காஷ்மீரில் சுமார் 4000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆம் தேதி அன்று விதி எண் 370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அத்துடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் என அப்பகுதி இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. லடாக் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த நடவடிக்கைகளையொட்டி காஷ்மீர் பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபுர்வமற்ற தகவல்கள் வந்தன. ஆனால் அரசு ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை எனவும் கூறி வருகிறது. உள்ளூர் அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என சுமார் 100 பேர்கள் வரை கைது செய்யப்பட்டிருக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது..
இந்நிலையில் ஏ எஃப் பி செய்தி நிறுவனம் பல தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு
”மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுமார் 4000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை எவ்வித குற்றச்சாட்டு மற்றும் விசாரணை இன்றி 2 ஆண்டுகள் வரையில் சிறையில் வைத்திருக்க முடியும். தற்போது சிறையில் இடம் இல்லாத காரணத்தால் பெரும்பாலானோர் காஷ்மீருக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையை அந்த நீதிபதி செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் கண்டறிந்துள்ளார்.
ஆனால் அரசு தரப்பில் இதுவரை கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை அளிக்கப்படவில்லை. அரசு அதிகாரிகள் ஒரு சிலர் மட்டுமே குறிப்பிட்ட பகுதிகளில் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு காவல்துறை அதிகாரி சுமர் 6000 பேர் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யபப்ட்டுள்ளன்ர் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர் பகுதியில் நடந்த போராட்டங்களில் சுமார் 8 பேர் காயமடைந்ததாக அரசு தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஸ்ரீநகரில் மட்டும் 12 இடங்களில் போராட்டங்கள் நடந்ததாகவும் அனைத்து போராட்டங்களிலும் வன்முறை நடந்ததாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அரசு தரப்பில் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படும் என அறிவித்துள்ளன. இன்று மாலைக்குள் தொலை தொடர்பு வசதிகள் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனச் செய்தி அளித்துள்ளது.