டில்லி
கடந்த 1990 ஆம் ஆண்டு மரணம் அடைந்த ராணுவ அதிகாரியின் 94 வயது மனைவிக்கு பிரதமர் மோடியின் தலையிட்டால் தற்போது ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்னல் ஜார்ஜ் பெஞ்சமின் இந்திய ராணுவத்தில் பொறியியல் பிரிவில் அதிகாரியாக பணி புரிந்தவர் ஆவார். இவர் கடந்த 1966 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் சுதந்திரத்துக்கு பிறகு ராணுவத்தில் இணைந்த 2003 ஆம் அதிகாரி ஆவார். இவர் கடந்த 1990 ஆம் வருடம் மரணம் அடைந்தார். அவர் மரணத்துக்கு பின் அவருக்கு அளிக்கப்பட்ட ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு மரணம் அடைந்த அதிகாரியின் மனைவி ஹீபா பெஞ்சமின் குடும்ப ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் ராணுவத் துறை அமைச்சகம் அவருடைய கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வந்தது. தற்போது ஹீபா தனது மகளுடன் இஸ்ரேலில் வசித்து வருகிறார். அவர் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து இது குறித்து நினைவூட்டி வந்தார்.
அதிகாரிகள் ஐந்தாவது, ஆறாவது ஊதிய ஆணையம் முடிவுக்குப் பின் அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்தனர். தற்போது 7 ஆவது ஊதிய ஆணையம் முடிவை அளித்தும் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இதனால் ஹீபா மிகவும் துயருற்றார்.
தற்போது 94 வயதாகும் ஹீபா பெஞ்சமின் இது குறித்து பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அனைத்து விவரங்களும் தெரிவித்திருந்தார். அதைப் படித்த பிரதமர் மோடி இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.
அதன் பிறகு ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத் உத்தரவின் பேரில் தற்போது அவருக்கு ரூ.75 லட்சம் ஓய்வூதிய பாக்கியை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஆறாம் ஊதிய ஆணைய முடிவின் படி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 7 ஆம் ஊதிய ஆணையத்தின் பரிந்துரைப்படி ஹீபாவுக்கு சுமார் ரூ.1 கோடி ஓய்வூதிய பாக்கி கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
நன்றி : INDIA TODAY