அகமதாபாத்: ஒரு ஏழை குடும்பத்திடம் 1988-ஆம் ஆண்டு ரூ.50 லஞ்சம் பெற்றதாக முன்னாள் சமூகநலத்துறை ஊழியர் இருவருக்கு எதிராக குஜராத் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 28 ஆண்டுகாலமாக இழுத்தடிக்கப்பட்டு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

1court

சமூக நலத்துறையில் பணி புரிந்த மன்சுக்லால் தேவராஜ் என்பவரும் அவரது உயரதிகாரி பாஞ்சிபாய் கோவாபாய் என்பவரும் சிறு தொழில் தொடங்க லோன் கேட்டுவந்த ஒரு குடும்பத்தினரிடம் ரூ 50 லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டனர். இவ்வழக்கில் இருவருக்கும் ஆறுமாத சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து சிறப்பு லஞ்ச-ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால் உயர்நீதிமன்றம் தேவ்ராஜ் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் கேட்க, அது சமர்ப்பிக்கப்படாமல் வழக்கு இதுவரை நிலுவையில் இருந்திருக்கிறது. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பாஞ்சிபாய் கோவாபாய் இறந்துவிட்டார்.
அந்த நீதிமன்றத்தில் இருந்த மிக பழைய அப்பீல் என்ற வகையில் இந்த வழக்கு மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டது. வழக்கு சம்பந்தமான எந்த ஆவணங்களும் நீதிமன்றத்தில் இல்லாத நிலையில் அரசுதரப்பு வழக்கறிஞரின் அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இதில் தேவ்ராஜ் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் அவர் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.