சென்னை: 19 ஆண்டுகள் கழித்தும் என்னை சச்சின் டெண்டுல்கர் நினைவு வைத்திருந்தது ஆச்சரியமாக இருக்கிறது என்று குருபிரசாத் கூறியிருக்கிறார்.
அண்மையில் சச்சின் டெண்டுல்கர் பேட்டி ஒன்றில் சொல்லிய விஷயம் 19 ஆண்டுகள் கழித்து பரபரப்பையும், ஆச்சரியத்தையும் அளித்து இருக்கிறது. அவர் கூறியது இதுதான்:
2001ம் ஆண்டு, சென்னையில் இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் நடைபெற்றது. அப்போது நான் பிரபல ஓட்டலில் தங்கி இருந்தேன். காபி வேண்டும் என்று ஓட்டல் ஊழியரிடம் கேட்டேன்.
அவரும் காபி கொண்டு வந்தார். என்னிடம் அனுமதி பெற்று ஆலோசனை ஒன்றை வழங்கினார். இடது முழங்கையில் நான் அணிந்திருக்கும் கவசம் எனது பேட்டிங் திறனை குறைக்கிறது.
சரியானதை அணிந்தால் உங்களால் நன்றாக விளையாட முடியும் என்றார். பல முறை நீங்கள் விளையாடுவதை வீடியோவில் எப்போதும் பார்த்துக் கொண்டு இருப்பேன்.
அதனால் சொல்கிறேன் என்றார். நானும் அவருக்கு நன்றி கூறிவிட்டு எனது முழங்கை காப்பை பார்த்தேன். பின்னர் எனது கவசத்தை மாற்றினேன். அதன் பின்னர் தான் எனது ஆட்டத்திறனில் மாற்றம் வந்தது. இதனை நான் யாரிடமும் இதுநாள் வரை வெளிப்படுத்தியது இல்லை என்றார்.
அந்த சம்பவத்தை பற்றி பேசிய குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் டுவிட்டர் பதிவில் சச்சின் வெளியிட்டார். கூடவே, அந்த நபரை கண்டுபிடிக்க உதவுங்கள் என்றார். அவ்வளவு.. இணையமும், கிரிக்கெட்டும் ஒருசேர பரபரப்பானது.
யார் அந்த நபர் என்ற தேடல் ஆரம்பமானது. முடிவில் பெரம்பூரைச் சேர்ந்த குருபிரசாத் என்பவர் தான் அவர் என்று தெரியவந்தது. இது குறித்து குரு பிரசாத் கூறியிருப்பதாவது:
நான் அந்த தருணத்தில் யூனிபார்மில் இருந்ததால் சர்வர் என்று அவர் நினைத்துவிட்டார். நானும், எனது நண்பர்களும் சச்சினின் எந்த ஆட்டத்தையும் விடாமல் பார்ப்போம்.
அப்போது எனக்கும், அவருக்கும் ஒரே வயது தான். எனவே அவரது ஆட்டத்திறன் பற்றி நான் அறிவேன். அதில் ஏதோ சிறு தவறு இருப்பதை கண்டுகொண்டேன்.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் மணிக்கட்டு வித்தியாசமாக இருக்கும். பந்தை நேராக எதிர்கொள்ளும் போது இருப்பதை விட, ஆப் சைடில் அல்லது நடு விக்கெட்டை நோக்கி பந்து வந்தால் வேறு மாதிரி விளையாட வேண்டும்.
ஆனால், இப்போது கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து, அந்த சம்பவத்தை சச்சின் நினைவு கூர்ந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த சந்திப்பே ஒரு நிமிடம் தான் இருக்கும்.
அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன். அவருக்கு கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.
அந்த தருணத்தில் இருந்த எனது நண்பர்களையும் சந்திப்பின் போது அனுமதிக்க வேண்டும். எனது குடும்பத்தினர் இந்த சம்பவத்தை நினைத்து ஆச்சர்யமடைந்தனர் என்றார்.